பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3.5 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பூந்தமல்லி நகர்மன்ற கூட்டம் தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில், நகர்மன்ற அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் ஸ்ரீதர், ஆணையாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு, தங்கள் வார்டுகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப் பணிகள் குறித்து பேசினர்.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் வகையில், மழைநீரை வெளியேற்றவும், மழைநீர் கால்வாய்களை சீரமைக்கவும், குட்டைகளை தூர்வாரவும், வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கும், அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள், ஜென்செட் இயந்திரங்கள், டீசல் இன்ஜின்கள், உதிரி பாகங்கள், பொக்லைன் இயந்திரங்கள், டிராக்டர், வாகனங்கள் வாடகைக்கு எடுக்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு, குடிநீர் மோட்டார், பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்து 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.