சென்னை: முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவாலயத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குரு பூஜை விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். நேற்று காலை 8 மணியளவில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தேவரின் திருவுருவப்படத்திற்கும் முதல்வர் மலர் தூவி மரியாதை செய்தார்.
இதில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி ராஜா, எம்எல்ஏக்கள் தளபதி, ஐ.பி.செந்தில்குமார், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், மாவட்டச் செயலாளர் மணிமாறன், மாநில நிர்வாகி பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டிஜிபி சங்கர் ஜிவால், மதுரை கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், போலீஸ் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இதையடுத்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு, முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காரில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வர் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய காங். பொறுப்பாளர் விஸ்வநாதன், எம்.பி. திருநாவுக்கரசர், அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் தரணி முருகேசன், பார்வர்ட் பிளாக் தேசிய தலைவர் நரேன் சட்டர்ஜி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
மதுரையில் 2 மேம்பால பணிகளை முதல்வர் துவக்கினார்
தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நகரின் நெரிசலை தீர்க்கும் வகையில் இரு உயர்மட்ட பாலங்களுக்கான கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அவர் தொடர்ந்து, மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் ரூ.190.40 கோடியில் அமையவுள்ள மேம்பாலப் பணிகளையும், அண்ணா பஸ் ஸ்டாண்ட் – ஆவின் சந்திப்பு – மேலமடை சந்திப்பு வரையிலான பகுதியில் ரூ.150.28 கோடியில் அமையவுள்ள மேம்பால பணிகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
‘மதுரை விமான நிலையத்துக்கு
தேவர் பெயர் சூட்ட வேண்டும்’
காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறுகையில், ‘‘தேவர் திருமகனார் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர். அனைத்து மக்களின் அன்பை பெற்றவர். ஆன்மிகத்தையும், அரசியலையும் இரு கண்களாக பார்த்தவர். மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் மணிமண்டபம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
சசிகலா தியானம்
பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த சசிகலா, முன்னதாக விஐபி பாதையில் வராமல் தலைவாசல் நுழைவு பாதை வழியாக வந்தார். நினைவாலயத்திற்குள் தரையில் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டார். பிறகு தேவரின் பூஜை அறைக்கு சென்றவர் மீண்டும் சில நிமிடங்கள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.