சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் கொள்ளுப்பேத்தி மனோசாந்திக்கு, மதுரை தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தின் அலுவலக உதவியாளராக கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பணி நியமன ஆணையை வழங்கினார்கள். முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களை 1974-ல் தமிழ் அகர முதலித் திட்ட இயக்குநராக நியமனம் செய்து பெருமைப்படுத்தினார். மேலும், மதுரை மாவட்டத்தில் தேவநேயப் பாவாணர் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து 30.10.2007 அன்று திறந்துவைத்து, அவரது வாரிசுதாரரான ஏ.டி.எம்.டி.பரிபூரணம் என்பவருக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணி நியமன ஆணையினை வழங்கினார்.
மேலும், பாவாணரின் நூல்களை அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு இருபது இலட்சம் ரூபாய் பரிவுத்தொகை வழங்கிச் சிறப்பித்தார். திருமதி.ஏ.எம்,டி.பரிபூரணம், மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர் உடல்நலம் குன்றி மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் கிகிச்சை பலனின்றி 20.11.2022 அன்று இயற்கை எய்தினார். ஏ.எம்,டி.பரிபூரணம் அவர்களின் மகளும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் கொள்ளுப் பேத்தியுமான திருமதி.க.மனோசாந்தி என்பவர், கருணை அடிப்படையில் தமக்குப் பணி நியமனம் கோரி முதலமைச்சர் அவர்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் வாரிசுதாரர் மனோசாந்தி என்பவரின் விண்ணப்பித்தினை ஏற்று, பரிவுடன் பரிசீலித்து, அவருக்கு மதுரை மாவட்ட மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தில் கருணை அடிப்படையில், பணி நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்கள். முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ள ஆணையின்படி, தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் கொள்ளுப்பேத்தி மனோசாந்தி அவர்களுக்கு மதுரை தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராகப் பணி நியமனம் செய்து அதற்குரிய ஆணையை வழங்கினார்கள். பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட க.மனோசாந்தி அவர்கள் தமக்கு பணி நியமனம் வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களுக்கும் தம் குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.