சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் போலீஸ் காவலில் உள்ள தேவநாதனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதலீட்டாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இதுவரை ரூ.25 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் மயிலாப்பூர் நிதி நிறுவனம் நடத்தி ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.25 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவநாதன் உள்ளிட்ட 3 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தேவநாதனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி செய்த பணத்தில் தேவநாதன், பினாமிகளின் பேரில் எந்த ஊர்களில் சொத்துக்களை வாங்கி உள்ளார்? வேறு என்னென்ன தொழில்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ( பினாமிகள்) ஈடுபட்டுள்ளனர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தாரின் பெயரில் வேறு தொழில்களில் பண முதலீடு செய்துள்ளாரா? வெளிநாட்டு முதலீடு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்ய திட்டமிட்டே தன் டி.வி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை இயக்குனர்களாக நியமித்தாரா? ஊழியர்களுக்கு மாத சம்பளம், மதிப்பூதியம் எவ்வளவு வழங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.