தேனி: தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் வாலிபரை போலீசார் தாக்கும் காட்சி வைரலானதை அடுத்து, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தவும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார். மடப்புரம் கோயில் காவாலாளி போலீசாரால் தாக்கி உயிரிழந்த நிலையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில், கடந்த ஜனவரி 14ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (25) என்பவரை, போலீசார் கடுமையாக தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 5 போலீசார் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தேனி எஸ்பி சிவப்பிரசாத் கூறியதாவது: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, தெற்குத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். ஆட்டோ டிரைவர். இவர் கடந்த ஜன. 14ம் தேதி பகல் 12.30 மணியளவில் தேவதானப்பட்டி அரிசிக்கடை பேருந்து நிறுத்தம் அருகில், நடந்த பொங்கல் விழாவில், போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், போக்குவரத்திற்கு இடையூறு செய்தார். இதையடுத்து போலீசார், அவரை தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். போதையில் இருந்ததால் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது ரமேஷ், போலீசாரின் கால்களில் விழுவது போன்று டிராமா செய்தார். அவரை கட்டுப்படுத்த முயன்றபோது, போலீசார் அதிகபட்சமாக பலத்தை பிரயோகப்படுத்தி இருக்கின்றனர்.
இதுகுறித்து அன்று ரமேஷ் மீது 296 (பி) பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். டிரைவர் ரமேஷை போலீசார் தாக்கியது சட்டப்படி குற்றமாகவே கருதப்படும். ஆனால், ரமேஷ் இதுவரை எந்த புகாரும் தரவில்லை. இருந்தபோதும், ரமேஷை தாக்கிய வீடியோ வெளியானது சம்பந்தமாக தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா, சிறப்பு எஸ்ஐ சிவசுப்பு, ஏட்டு பாண்டி, முதல்நிலைக் காவலர்கள் மாரிச்சாமி, வாலிராஜன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேனி கூடுதல் எஸ்பி ஜெரால்டு அலெக்சாண்டர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும், தவறு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.
வீடியோ வெளியானது எப்படி?
தேவதானப்பட்டியை சேர்ந்த வக்கீல் பாண்டிராஜன், ஒரு வழக்கு சம்பந்தமாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனவரி 14ம் தேதி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தரக்கோரி மனு அளித்தார். இம்மனுவின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம், இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா அனுமதியின்பேரில் போலீஸ்காரர் ரவிச்சந்திரன், சிசிடிவியில் பதிவான காட்சிகளை வக்கீல் பாண்டியராஜனுக்கு வழங்கினார். அதில், ரமேஷை போலீசார் சரமாரியாக தாக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது தெரியவந்தது. ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வக்கீல் பாண்டியராஜனுக்கு போலீசார் அளித்த வீடியோ, அவர்களையே சிக்கலில் மாட்டியுள்ளது.