தேவதானப்பட்டி அருகே லோடு வேன்-பைக் மோதல்: தந்தை, மகன் பலி: புத்தாண்டு நாளில் சோகத்தில் மூழ்கியது கிராமம்
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே, லோடுவேன்- பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவரது மகன் வீரமுத்து (25). திருமணமானவர். தந்தை, மகன் ஊர்ப்பகுதியில் உள்ள தோப்பில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று சொந்த வேலைக்காக இருவரும் ஜி.கல்லுப்பட்டியில் இருந்து பைக்கில் பெரியகுளம் சென்றனர். பின்னர் நள்ளிரவில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை, வீரமுத்து ஓட்டி வந்தார்.
தேவதானப்பட்டி அருகே, டி.வாடிப்பட்டி பிரிவில் வந்தபோது, எதிரே தேனி நோக்கி சென்ற லோடுவேனும், பைக்கும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில், இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து தேவதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று இரு உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லோடுவேன் டிரைவரை தேடி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் விபத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவம் சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


