*விவசாயிகள் எதிர்பார்ப்பு
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையை தூர்வாரி போதிய தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவதானப்பட்டிக்கு வடக்கே மேற்கு தொடர்ச்சிமலை கொடைக்கானல் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. இந்த அணைக்கு மஞ்சளாறு, வரட்டாறு, மூலையாறு, இருட்டாறு, தலையாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும்.
இதன் மொத்த தண்ணீர் கொள்ளளவு 487.35 மி.க.அடியாகும். பழைய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 3386 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு(வலது பிரதானக் கால்வாய்) பாசனப்பரப்பு 1873 ஏக்கரும், தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கரும் என மொத்தம் நேரடியாக 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் இரண்டு மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாக பாசன வசதி பெறுகிறது.
இது தவிர தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, தும்மலப்பட்டி, குன்னுவாரன்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த மஞ்சளாறு அணை விளங்குகிறது. தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளம் கண்மாய், கெங்குவார்பட்டி மத்துவார்குளம் கண்மாய் மற்றும் உபரி நீர் தேக்கங்களுக்கு மஞ்சளாறு அணை ஆற்றுப்பாசனம் அமைகிறது.
மஞ்சளாறு அணையின் முழு கொள்ளளவான 487.35 மில்லியன் கன அடி கொள்ளளவு என்பது பெயரளவிற்கு உள்ளது. அணையின் மொத்த உயரத்தில் தற்போது 20 அடி வரை அணையில் மண் மேவி உள்ளது. இதனால் அணையின் முழு கொள்ளளவு தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க முடியாத நிலையால் அணை பாசனப்பரப்பில் ஒரு போகம் நெல் சாகுபடி மட்டுமே செய்ய முடியும்.
இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கு மழை இல்லை என்றால் கேள்விக்குறியாகிவிடுகிறது. மேலும் சில நேரங்களில் பருவமழை தாமதமாக பெய்துவிட்டால் முதல் போகம் நெல் சாகுபடிக்கும் கேள்விக்குறியாகிவிடுகிறது.
பாசனப்பரப்பு சாகுபடி நிலங்களுக்கு போதிய இயற்கை ஒத்துழைக்கிறது. அணையில் போதிய நீர்த்தேக்க கொள்ளளவு இடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை உரிய நேரத்திற்கு பெய்து அணை நிரம்பி விடுகிறது. அனைத்து வசதிகளும் இருந்து அணை 20 அடி உயரம் வரை மண் மேவி உள்ளதால் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்க முடியாத நிலை உள்ளது.
இது குறித்து தேவதானப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், மஞ்சளாறு அணைக்கு போதிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தும், தேவையான இயற்கை சூழல் இருந்தும், அணையில் மேவிய மண்ணால் 20 அடி தண்ணீரை தேக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஆகையால் அணையை தூர்வாரி முழு கொள்ளளவு நீரை தேக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.