கோபி: வேனில் கடத்திய 311 டெட்டனேட்டர், 993 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார் குடோன் உரிமையாளர் உட்பட 2 பேரை கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் கொங்கணகிரி குமாரசாமி கோயில் பகுதியில் வேனில் டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சி உள்ளிட்ட வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் பாறைகளை வெடி வைத்து தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருட்கள் ஆபத்தான முறையில் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வேன் டிரைவர் பிரகாஷ்(25) என்பவரை பிடித்து விசாரித்தனர்.அதில், கவுந்தப்பாடியில் செயல்பட்டு வரும் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் இருந்து 161 சாதாரண டெட்டனேட்டர்கள், 150 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 993 ஜெலட்டின் குச்சிகள் ஆகியவற்றை டி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல் குவாரிக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக வேனில் வெடிபொருட்களை கொண்டு சென்ற டிரைவர் பிரகாஷ் மற்றும் வெடிமருந்து குடோன் உரிமையாளர் சுப்பிரமணி ஆகியோர் மீது வெடிமருந்து சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.