சென்னை: ஏலகிரி, ஏற்காடு சுற்றுலா தளங்களில் ரோப் கார் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக சுற்றுலாத்துறை டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் தெய்வீக தலங்கள், பசுமைமிக்க மலை தொடர்கள், தொன்மையான கோயில்கள், கலை, கட்டிடக்கலை மற்றும் இயற்கை அழகு நிறைந்த பல சுற்றுலா தளங்கள் உள்ளன. தமிழ்நாடு வரலாற்று மரபிலும், கலாசார சிறப்பிலும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழகம் ஒரு மனதிற்கினிய இடமாக உள்ளது. அந்த வகையில் பசுமை சுற்றுலா, சுகாதார சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, பாரம்பரிய ஊர் சுற்றுலா, கடற்கரை மற்றும் அட்வெஞ்சர் சுற்றுலா போன்றவை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது. மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், சுற்றுலா பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என குறைந்த செலவில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா சேவைகளை வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சுற்றுலா பயணிகளின் விருப்பமான முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் இயக்கி வருகிறது.
வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டார் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 590 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய படகு குழாம்கள் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா பயணிகள் இயற்கையான மலைப்பகுதிக்கு செல்ல மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி மலை பிரதேசங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலைப் பிரதேச சுற்றுலா தலங்களில் ரோப் கார் வசதி என்பது, அந்த இடங்களில் உள்ள இயற்கை எழிலையும், மலைகளின் அழகையும் கண்டு ரசிக்க ஒரு சிறந்த வழியாகும். இந்த ரோப் கார் வசதிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்குகின்றன. ரோப் கார் வசதிகள், மலைகளின் மீதுள்ள கோயில்கள் அல்லது பிற சுற்றுலா இடங்களுக்கு எளிதாக செல்ல உதவுகின்றன. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அழகை கண்டு ரசிக்க ரோப் கார் அமைப்பதற்கு தொழில்நுட்ப சாத்திய கூறுகள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை தெரிவித்திருந்தது.
மேலும் ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி (காவிரி நீர்தேக்கப்பகுதி) ஆகிய சுற்றுலாத் தலங்களில் வாகன நிறுத்துமிடம், பூங்காக்கள், உணவுக்கூடம், நடைபாதை மற்றும் தகவல் மையம் ஆகிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும், ஏலகிரியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும் என மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி ஏற்காடு, ஏலகிரி ஆகிய மலைப்பிரதேச சுற்றுலாத்தளங்களில் ரோப் கார் அமைப்பதற்கான திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது. எவ்வளவு தூரத்துக்கு ரோப் கார் வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது என ஆய்வு செய்யப்பட உள்ளது. எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு ரோப் கார் வழித்தடம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ரோப் கார் வசதிகள், சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், அப்பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ரோப் கார் பயணம், ஒரு புதுமையான அனுபவத்தை வழங்குவதோடு, மலைப் பிரதேசங்களின் அழகை ரசிக்க ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான வழியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.