சென்னை: ஒன்றிய ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில் பெரியார் சிலையை உடைப்போம், வாசகத்தை அழிப்போம் என்பதா? என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக எச்சரித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 106வது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் எம்பி விஜய் வசந்த், காங்கிரஸ் துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சி. அணி மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா மாபெரும் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: பெரியார் சிலையை உடைப்போம். அவர் சிலையின் கீழ் இருக்கும் வாசகத்தை அழிப்போம் என ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கின்றோம் என்ற மமதையில் சொல்கின்றார். உங்களை போன்ற கோழைகள் அல்ல. பெரியார் ஆட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என நினைக்கின்றனர்.
அது ஒரு போதும் முடியாது. ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். பாஜவை அரசை நீக்கி மோடியை விரட்ட வேண்டும் என்றால் அது ராகுலால் மட்டும் தான் முடியும். இதனால் அனைவரும் ராகுலை ஆதரிக்கின்றனர். பாஜவை ஆதரித்து வந்தவர்கள் இன்றைக்கு நம்மை ஆதரிக்கின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தா, பீகாரின் நிதிஷ் குமார் ஆகியோர் ராகுலை ஆதரிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.மேலும் எஸ்.சி.துறை சார்பில் நலிவடைந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.