கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூரை சேர்ந்தவர் வெங்கடேசன்(46). வாடகை கார் டிரைவர். இவரின் வருமானம் குறைவாக இருந்தாலும் தினசரி தன்னால் முடிந்த அளவுக்கு ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். மேலும் அப்பகுதிகளில் இறக்கும் ஆதரவற்றோரின் உடல்களை காவல்துறை அனுமதியுடன் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்று இறந்த ஒருவரது உடலை கிழக்கு போலீசார் அனுமதியுடன், போலீஸ்காரர் புகழேந்திரன் முன்னிலையில் டிரைவர் வெங்கடேசன் நேற்று நல்லடக்கம் செய்தார். இது அவர் அடக்கம் செய்த 170வது சடலமாகும். உறவுகள் இறந்தாலே கண்டுகொள்ளாதவர்கள் மத்தியில் வெங்கடேசனின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உதவும் கருணை கரங்கள் அமைப்பு மூலம் இந்த சேவையை அவர் செய்து வருகிறார்.