பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் போட்டிகளுக்கு பின் வெளியான உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில், ஜானிக் சின்னர், சபலென்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர். பெரும் வெற்றித் தொடரான பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டி 2000 தரவரிசைப் புள்ளிகள் கொண்ட போட்டியாகும். பிரஞ்ச் ஓபன் முடிந்துள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நேற்று இந்த வாரத்துக்கான உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியானது. அதன்படி ஆண்களுக்கான ஏடிபி ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். ஆஸி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக 3 மாதங்கள் டென்னிஸ் போட்டிகளில் சின்னர் பங்கேற்கவில்லை. அதன் பிறகு ஆடிய இத்தாலி ஓபன், பிரஞ்ச் ஓபன் இரண்டிலும் இறுதி ஆட்டத்தில் அல்காரசிடம் தோல்வியை தழுவினார். இருப்பினும் 10,880 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்கிறார்.
பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் 8,850 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடர்கிறார். பிரெஞ்ச் ஓபனில் காலிறுதியுடன் வெளியேறிய ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6,385 புள்ளிகளுகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார். பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியுடன் வெளியேறிய முன்னாள் நெம்பர் ஓன் வீரர் நோவக் ஜோகோவிச் 5வது இடத்தை பிடித்துள்ளார். பெண்களுக்கான டபிள்யூடிஏ தரவரிசையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 11,553 புள்ளிகளுடன் தொடர்ந்து நம்பர் ஒன் வீராங்கனையாக நீடிக்கிறார். இந்த ஆண்டு ஆஸி ஓபன், பிரெஞ்ச் ஓபன் போன்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும், இண்டியன்வெல்ஸ் ஓபன், ஸ்டட்கார்ட் ஓபன், இத்தாலி ஓபன், என முக்கிய போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை.
ஆனால் இவற்றில் 90 சதவீத போட்டிகளில் பைனல் வரை முன்னேறி இருக்கிறார். இடையில் மயாமி, மாட்ரிட் ஓபன்களில் சாம்பியன் பட்டமும் வென்றார். எனவே சபலென்காவின் முதல் இடத்துக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை. இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன், முன்னதாக சிட்னி ஓபன் வென்ற அமெரிக்காவின் கோகோ காஃப் 8,083 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். அதேபோல் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி) ஆகியோர் முறையே 3, 4வது இடத்தில் உள்ளனர். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) மேலும் 2 இடங்கள் பின்தங்கி 7வது இடத்தில் உள்ளார்.