*வேதனையில் மரங்களை வெட்டி வீசும் விவசாயிகள்
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 1,50,000 மெட்ரி டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுவை மிகுந்த ரகங்களாக அல்போன்ஸா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் போன்ற பல்வேறு வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைக்கப்படுகிறது. விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.
நடப்பாண்டு பருவமழை நல்ல முறையில் பெய்ததால் இரட்டிப்பு மகசூல் கிடைத்துள்ளது. இருப்பினும் நோய் தாக்கம், விலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மா ரகங்களில் 80 சதவீதம் தோத்தாபுரி எனப்படும் பெங்களூரா ரகம் தான். இந்த மாங்காய்கள் அதிகளவில் மாங்கூழ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், போதிய வருவாய் கிடைக்காததால், விவசாயிகள் மாங்காய்களை பறித்து சாலையோரம் வீசுகின்றனர். மாவிற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய, 2 முறை முத்தரப்பு கூட்டம் நடத்தியும், எவ்வித பயனும் இல்லை.
தற்போது, தோத்தபுரி ரக மாங்காய்கள் மண்டிகளில் கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரையிலும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தோட்டத்திற்கான குத்தகை, மரங்கள் பராமரிப்பு, மா அறுவடை கூலிக்கு கூட கட்டுப்படியாக வில்லை.
சீசன் தொடங்கிய போது கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு மாங்காய்கள் கிடைப்பதாக கூறி, விலையை உயர்த்தி வழங்க வியாபாரிகள் மறுத்து விட்டனர். ஆந்திர மாநிலத்தில் மா விவசாயிகளை காக்கும் வகையில், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில், மாவிற்கான கொள்முதல் விலையாக கிலோ ரூ.12 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் ரூ.8ம், அரசு மானியமாக ரூ.4ம் சேர்த்து வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டதுடன், மா கொள்முதல் செய்து வருகிறார்கள். இதேபோல், தமிழக அரசு மா விவசாயிகளின் கோரிக்கை ஏற்று மா கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, மானியம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மா விவசாயிகள், அறுவடை செய்த மாங்காய்களை சாலைகளில் கொட்டி ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி தாலுகா பகுதிகளில் மா விற்கு போதிய விலை கிடைக்காத காரணத்தால் மா தோட்டங்களை அழித்து, மரங்களை செங்கல் சூகைளகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் மாற்று பயிர் சாகுபடிக்கு செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மா விவசாயி கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டமாக விளங்கி வருகிறது. கடந்த 3 வருடங்களுக்கு முன் மாவட்டத்தில் சுமார் 45 ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டது. மாவிற்கு போதிய விலை கிடைக்கவில்லை. காற்று, மழை பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்த மா விவசாயிகள், சுமார் 5 ஹெக்டேருக்கு மேல் மா மரங்களை அழித்து, மாற்று பயிருக்கு மாறி விட்டனர்.
நாங்கள் எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து மா மரங்களை காப்பாற்றி வந்தோம். மா சீசன் நேரத்தில் மழை, சூறாவளி காற்று, ஆலகட்டி மழை என ஆண்டுதோறும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆனால் இந்தாண்டு மா விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனையானதால் கட்டுபடி ஆகவில்லை. எனவே மா மரங்களை வெட்டி அகற்றிவிட்டு மாற்று பயிர் சாகுபடிக்கு செல்ல உள்ளோம்’ என வேதனையுடன் தெரிவித்தார்.
10 ஹெக்டேர் மாமரங்கள் அழிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் சுமார் 45 ஹெக்டேருக்கு மேல் மாந்தோட்டங்கள் காணப்பட்டது. காலப்போக்கில் மா விலை குறைவு, விளைச்சல் குறைவு என மா விவசாயிகள் பாதிக்கப்பட்டதால், மாந்தோட்டங்கள் அழிக்கப்பட்டன. தற்போது, 35 ஹெக்டேர் அளவில் தான் மாந்தோப்புகள் உள்ளன.
இந்தாண்டு மா விலைக்கு கேட்காத நிலையில், விவசாயிகள் மாமரங்களை அழித்து விறகிற்காக எடை போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். தமிழக அரசு மா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மா விவசாயிகளை காப்பாற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே, எஞ்சிய மாந்தோட்டங்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.