நீடாமங்கலம்: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கழுத்தை நெரித்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுதா (38). இவர் பாண்டவையாறு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார்(28), முருகன்(40) ஆகிய இருவரும் சுதாவை உல்லாசத்துக்கு அழைத்து வற்புறுத்தியுள்ளனர்.
அவர்கள் ஆசைக்கு இணங்க மறுத்த சுதா, அவர்களை கண்டித்து, விரட்டி உள்ளார். ஊருக்குள் சென்று நடந்த சம்பவத்தை கூறிவிடுவார் என எண்ணிய 2 பேரும், சுதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவரை பிடித்து கழுத்தை நெரித்து, ஆற்று தண்ணீரில் அமுக்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற சிலர் இதை பார்த்து சத்தமிட்டுள்ளனர்.
இதனால் இருவரும் சுதாவை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். கிராம மக்கள் சுதாவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிந்து அஜித்குமாரையும், முருகனையும் தேடி வருகின்றனர்.