சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பான வழக்கில் சட்டமன்ற சபாநாயகர், செயலாளர் பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில், 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட 4 பேர் நீக்கப்பட்டனர்.
2022ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி கட்சியின் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரையும், துணை செயலாளராக கிருஷ்ணமூர்த்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வான எதிர்க்கட்சி துணைத்தலைவர், துணை செயலாளரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை மாற்றம் தொடர்பாக இதுவரை சபாநாயகர் முடிவெடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக உறுப்பினர்களுடன் இருப்பதினால் எதிர்க்கட்சி விவாதங்களில் தலையிடுவதால் கட்சியினர் திறமையாக செயல்பட முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் வழங்கும்படி சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும் என்றும், இருக்கையை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரும், துணை செயலாளராக கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு இருக்கை ஒதுக்கி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று 20 முறை நினைவூட்டும் கடிதங்கள் அனுப்பியும் சபாநாயகர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த மனுவுக்கு டிசம்பர் 12ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சபாநாயகர், சட்டமன்ற செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.