சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியில் இருந்து துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சி.மதுமிதாவுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கான உபகரணங்களை வாங்க ரூ.1,74,000க்கான காசோலையும், துப்பாக்கி சுடுதல் வீரர் தி.எஸ்வந்த் குமாருக்கு ரூ.4,65,450க்கான காசோலையும், வாள்வீச்சு வீரர் மோ.நிதிஷுக்கு ரூ.1,49,555க்கான காசோலையையும் வழங்கினார். மேலும் சைக்கிளிங் வீராங்கனை ஜே.நிறைமதிக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டிலான அதிநவீன சைக்கிளிங் உபகரணத்தையும், சைக்கிளிங் வீராங்கனை ஜெ.பி.தன்யதாவுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் சிறப்பு பயிற்சி மேற்கொள்ள ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.
தொடர்ந்து கிரிக்கெட் வீராங்கனைகள் ஜெ.சஹானா மற்றும் ஜெ.நேகா ஆகியோருக்கு சர்வதசே கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் வகையிலான சிறப்பு பயிற்சி பெற தலா ரூ.90 ஆயிரத்திற்கான காசோலைகள், தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியை நடத்தியதற்காக தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் காசோலை என மொத்தம் ரூ.34.19 லட்சக்கான காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
சைக்கிளிங் வீராங்கனை ஜே.நிறைமதி 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் சைக்கிளிங் போட்டியில் வெண்கல பதக்கமும், 2025 ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு சைக்கிளிங் டிராக் போட்டியில் தனிப்போட்டி மற்றும் குழு போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்பட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.