தண்டையார்பேட்டை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கான திட்டப்பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் 52வது வார்டு ஓ.எஸ்.எச் சாலை விளையாட்டு மைதானத்தில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் நவீன மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு காணொலி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டதற்காக அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில், ராயபுரம் பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் கீதா சுரேஷ், வட்ட செயலாளர் புகழேந்தி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.