சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் இன்று 30 ஜோடிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து, ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான் என்று வாழ்த்தினார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், பசுமைவழி சாலையில் உள்ள கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 30 ஜோடிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து பேசியதாவது: அமைச்சர் சேகர்பாபு நடத்துகின்ற நிகழ்ச்சி, அவர் துறை நடத்துகின்ற நிகழ்ச்சி, அது எப்போதுமே ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்திருக்கும். ஒரு திருமணத்திற்கு செல்கின்றபோதே அப்படி என்றால், இன்று இந்த மேடையிலே 30 இணையர்களுக்கு நான் திருமணத்தை நடத்தி வைக்கின்றோம். 30 இணையர்கள் அவர்களது இல்வாழ்வில் இன்றைக்கு அடியெடுத்து வைக்கின்றார்கள். அதுவும், இன்றைக்கு மிக, மிக முக்கியமான நாள். இன்றைக்கு காதலர் தினம். இதை சொன்னால் சிலபேருக்கு கோபம் வரும். அவர்கள் எல்லாம் காதலர் தினத்தை கொண்டாட கூடாதுன்னு சொல்வார்கள்.
காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா. ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான். அப்படிப்பட்ட முக்கியமான தினத்திலே இந்த திருமணங்களை நடத்தி வைக்கின்றோம். ஆகவே உங்கள் அனைவரின் சார்பாக இந்த 30 மணமக்களிடம் நான் கேட்டுக் கொள்வது, நல்ல காதலர்களாக, அதைவிட முக்கியம் நல்ல நண்பர்களாக வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையோடு, மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று மணமக்களை உங்கள் சார்பாக வாழ்த்துகின்றேன். நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்புக்கு வந்ததில் இருந்து, அமைச்சர் சேகர்பாபு முயற்சியால் கிட்டத்தட்ட 2,600 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ரூ.7 ஆயிரத்து 400 கோடி மதிப்புள்ள 7 ஆயிரத்து 500 ஏக்கர் அளவிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1 லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் அளவிலான கோயில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அளவீடு செய்து முடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அவருடைய சாதனைகள், நீண்டு கொண்டே போகின்றது. அன்னதான திட்டங்கள், கல்விப்பணி, அறப்பணி என இந்து சமய அறநிலையத்துறை எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்.
முந்தைய ஆட்சியினர் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருமணங்களை நடத்தி வைக்கும் திட்டத்தையே நிறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, 2022 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 1,800 திருமணங்களை நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இன்னும் 700 திருமணங்கள் நடத்தி வைக்க அதற்கான பணிகளை அமைச்சர் மேற்கொண்டுள்ளார். உங்களில் பலருடைய பெயர் பட்டியலை நான் படித்துப் பார்த்தேன். பேருக்கு பின்னால் படிப்பை குறிக்கின்ற வகையில், பி.இ,, எம்.பி.ஏ, எம்.எஸ்.சி போன்ற பட்டங்கள் அதிலே இடம் பெற்று இருந்தன. அதிலும் குறிப்பாக, இங்கே மணமகள்களில் 95 சதவீதம் பேர் பட்டதாரிகளாக இருக்கின்றார்கள். அதிலும் Professional டிகிரி முடித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும்தான் சாத்தியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்றைக்கு படிக்க விடாமல் செய்த அந்த இழிவிலிருந்து, நம்முடைய மக்களை மீட்டெடுத்து மாபெரும் புரட்சியை இந்த மண்ணில் நிகழ்த்திக்காட்டியது தான் நம்முடைய திராவிட இயக்கம். அந்த திராவிட இயக்கத்தாலும், பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் வழியிலே உழைப்பாலும், அவர்கள் தந்த திட்டங்களாலும், இன்றைக்கு நீங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடுமே கல்வியில் சிறந்ததொரு மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, குறிப்பாக, தமிழ்நாட்டின் Gross Enrolment Ratio அதாவது உயர்கல்வி சேர்க்கை, பள்ளிக்கூடம் முடித்துவிட்டு கல்லூரி சென்று சேர்கின்ற சதவீதம், 47 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் உயர்கல்வி சேர்க்கையில் முதல் இடத்தில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.