வேலூர்: ‘போலீசாருக்கு வாரவிடுமுறை அளிப்பது குறித்து முதல்வரிடம் எடுத்துக்கூறுவேன்’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் திமுக இளைஞர் அணி சார்பில், ஒரு சமூக ஊடக வலைதள பயிற்சியாளரை மண்டல வாரியாக திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நியமித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்கான நேர்காணல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் உள்ள அனுகுலாஸ் ஒட்டலில் நேற்று நடந்தது. திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினார்.
தொடர்ந்து வேலூர் பேபி மஹாலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுடன் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், ‘வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என தலைவர் கூறியுள்ளார். ஆனால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியினர் உழைக்க வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை மூலம் வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்’ என்றார்.
இந்த கூட்டத்துக்கு பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களை சந்திதார். அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற கேள்வி கேட்டனர். அதற்கு ‘எந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது தலைவருக்கு தெரியும் அவர் முடிவு எடுப்பார் என்றார். காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கப்படுமா? என்று கேள்விக்கு, ‘காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன்’ என்றார்.