சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஜூன் 3 – மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவினை முன்னிட்டு, 11.06.2025 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஊரகம் மற்றும் நகர்ப்புரங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கிக் கடன் இணைப்புகள், மாநில அளவிலான பன்முகக் கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், பரிசுத் தொகை போன்றவற்றை வழங்கி விழாப் பேருரையாற்ற உள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்ட சுய உதவிக் குழு இயக்கம் பெற்றி வெற்றியின் காரணமாக பிற மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடி மற்றும் முதன்மை திட்டமாக விளங்குகிறது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 11.06.2025 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு 2024-2025ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகளை வழங்கவுள்ளார். சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டை ஊக்குவித்திட கடந்த நான்காண்டுகளில் (2021 – 2025) 18,45,438 குழுக்களைச் சேர்ந்த 2,39,90,694 உறுப்பினர்களுக்கு 1,14,307.61 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
சுய உதவிக் குழுக்களுக்கு 2025-2026ஆம் நிதியாண்டில் 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக 11.06.2025 அன்று மாநிலம் முழுவதும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
தொடர்ந்து மாநில அளவிலான பன்முகக் கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகை ஆகியவற்றையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்குகிறார். இந்நிகழ்வினைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோரால் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்திடும் வகையில் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘மதி Logo’ வெளியிடுவதுடன், சுய உதவிக் குழுக்களால் தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘செக்கு கடலை எண்ணையும்‘ அறிமுகப்படுத்தவுள்ளார்.
சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் மணிமேகலை விருதுகளையும், பொருளாதார சுய சார்பிற்காக வழங்கப்படும் வங்கிக் கடன் இணைப்புகளையும் பெறும் சுய உதவிக் குழுவினர் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி, சிறப்பான முறையில் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது