சென்னை: பருவ மழையால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து களப்பணியாற்ற வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், சென்னை பெருநகர மாநகராட்சியால் மேம்பாட்டு பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நீர்வழிக் கால்வாய்கள், குளங்கள் மறு சீரமைக்கும் பணிகள், 2024 வடகிழக்கு பருவமழையின் போது நீர் தேங்கிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), வனத்துறை, சென்னை பெருநகர கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகள் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கலந்துரையாடி பணிகள் விரைவாக முடிவடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருவமழையால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றி அரசிற்கு நற்பெயர் பெற்றுத் தரவேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், துணை மேயர் மகேஷ் குமார், செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.