Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கு இன்று முதல்நிலை தேர்வு: 72 பதவிகளுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி

* மையங்களுக்கு செல்போன், ஸ்மார்ட் வாட்ச் அணிந்து செல்ல தடை

சென்னை: குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 72 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. 72 பதவிக்கு நடைபெறும் தேர்வை 2.49 லட்சம் பேர் எழுதுகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும்.

அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். இதில் குரூப் 1 பதவிக்கு 2,27,982 பேரும், குரூப் 1ஏ தேர்வுக்கு 6465 பேரும், குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு சேர்த்து 14849 பேரும் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகா மையங்கள் என 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க 987 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 41,094 பேர் எழுதுகின்றனர். இதற்காக சென்னையில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டை கட்டாயம் தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.

தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும். தேர்வு மையத்தின் அனைத்து நுழைவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மூடப்படும். அதன் பின்னர் வரும் யாரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வின் போது தேர்வர்கள் கருப்பு மை பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பொருட்களை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.