* 75 தொகுதிகளில் விளையாட்டு அரங்கங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.100 கோடியில் விளையாட்டு உபகரண தொகுப்புகள்
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றின் பயனாக இந்திய அளவில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறை பல சாதனைகளை நிகழ்த்தி, இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் சென்னை என புகழ் வளர்த்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள் விவரம்:
* 44வது செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்க கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ ரூ.114 கோடி செலவில் மாமல்லபுரத்தில் உலக புகழ் பெற்ற 44வது செஸ் ஒலிம்யாட் போட்டி நடத்தப்பட்டது. உலகின் 186 நாடுகளை சார்ந்த 1654 சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் தமிழ்நாடு அரசின் விருந்தோம்பலை கண்டு வியந்து மகிழ்ந்து போற்றிய வரலாறு நிகழ்ந்தது.
* சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வரால் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
* ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: தமிழக அரசு வழங்கிய ரூ.22.66 கோடி நிதியுதவியுடன், 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி 16 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
* கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி: துணை முதல்வரின் முயற்சிகளின் பயனாக, 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்புடன் நடத்தப்பட்டது. இதில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
* முதலமைச்சர் கோப்பை: 15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை-2023, கடந்த 2023ம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.50.86 கோடி செலவில் நடத்தப்பட்டது. இதில் பங்கு பெறும் வீரர்களின் எண்ணிக்கை பெருகியதால், முதலமைச்சர் கோப்பை 2024ல் ரூ.83.37 கோடி செலவில் நடத்தப்பட்டது. 5 லட்சத்து 29 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்று புதிய வரலாற்றை படைத்தனர்.
* சர்வதேச அலை சறுக்கு போட்டி: உலகளவில் புகழ்பெற்ற சர்வதேச அலை சறுக்கு போட்டி மாமல்லபுரத்தில் ரூ.2.68 கோடியில் சிறப்புடன் நடந்தது.
* தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை : முதல்வரால் கடந்த 2023 மே 8ம் தேதி புதிய முயற்சியாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 680 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.17 கோடி அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 174 பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கு புகழ் தேடி தந்துள்ளனர்.
* ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்: 17 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.1.19 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பாராலிம்பிக் 2024 போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
* 4,617 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை: சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள 4,617 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு முதல்வர், ஊக்கத் தொகையாக ரூ.152 கோடியே 52 லட்சம் வழங்கி சிறப்பித்துள்ளார்.
* கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்: டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
* விருதுகள்: சர்வதேச போட்டிகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் பயனாக, விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரிக்கப்பட்டு, அகில இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் “விளையாட்டு வணிக விருது-2023” வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் விருதுகள், ஜெம் அவார்ட்ஸ், விருது வழங்கப்பட்டுள்ளது. இளைய உலக செஸ் சாம்பியனான டி.குகேஷ், கேல் ரத்னா விருதை பெற்றுள்ளார். 2024ம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது 4 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர். 38வது தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு 26 தங்கம் 31 வெள்ளி மற்றும் 35 வெண்கலப் பதக்கங்களுடன் 6வது இடத்தை பிடித்து சாதித்துள்ளது.
* மாநில இளைஞர் விருது: கடந்த 4 ஆண்டுகளில் சிறந்த சமூக சேவைக்காக 10 ஆண்களுக்கும், 8 பெண்களுக்கும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கி பாராட்டப்பட்டுள்ளது.
* வேலை வாய்ப்புகள்: சிலம்பம் விளையாட்டு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டி மற்றும் பாரா ஒலிம்பிக் தேசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற 104 விளையாட்டு வீரர்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் நியமிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளனர்.
* ஓய்வூதிய திட்டம்: நலிவடைந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டு. 74 வீரர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இப்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் ஓய்வில்லா உழைப்பின் மூலம் தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் விளையாட்டு அரங்குகளால்- ஊக்கம் அளிக்கப்படும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளால் இந்திய விளையாட்டு உலகின் தலைமையிடமாக தமிழ்நாடு எழுச்சி பெற்று வருகிறது.
* கார் பந்தயம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மிகுந்த கவனம் செலுத்தி இந்தியாவிலேயே முதல்முதலாக இரவு நேர பார்முலா-4 கார் பந்தய போட்டியை 2024 ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடத்தினார். இந்த போட்டி உலக அளவில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைகளை ஈட்டி தந்தது.