வாஷிங்டன்: தனது பதவி பறிப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் சதி இருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியது நகைப்புக்குரியது என அமெரிக்க வெளியுறவு துறை விளக்கம் அளித்துள்ளது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் பதவியை ராஜினாமா செய்து, இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்தார். தற்போது பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், தனது பதவி பறிப்பில் அமெரிக்காவின் சதி இருப்பதாக ஹசீனா குற்றம்சாட்டி இருந்தார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் அளித்த பேட்டியில், ‘‘இது நகைப்புக்குரியது. ஹசீனாவின் ராஜினாமாவில் அமெரிக்கா தலையிட்டது என்பது முற்றிலும் தவறானது. கடந்த சில வாரங்களாக தவறான பல செய்திகளை நாங்கள் பார்த்து வருகிறோம். அதே சமயம் தெற்காசியாவில் உள்ள எங்களின் நட்பு நாடுகளுடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் உண்மையான தகவல்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.
இதற்கிடையே, ஹசீனா மீது ஏற்கனவே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் மீதும் அவரது அமைச்சரவையில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மீதும் நேற்று கடந்த 2015ல் உச்ச நீதிமன்ற வக்கீல் ஒருவரை கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக ஐநா கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்படும் என வங்கதேச இடைக்கால அரசு நேற்று தெரிவித்துள்ளது.
இந்து குடும்பத்தினர் வீடு தீ வைத்து எரிப்பு
மாணவர் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் இந்துக்கள் பலரது வீடு, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்து கோயில் சேதமடைந்தன. இது சர்வதேச அளவில் பேசுபொருளான நிலையில், இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் நேற்று முன்தினம் டாக்காவில் இந்து கோயிலுக்கு சென்று இடைக்கால அரசில் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அக்சுவின் பராபாரி மந்திர்பாரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு இந்து குடும்பத்தினர் வசித்த வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்கதேச வெளியுறவு அமைச்சக ஆலோசகர் முகமது தவுஹித் ஹூசேனை டாக்காவில் இந்திய தூதர் பிரனாய் வர்மா சந்தித்து பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், வங்கதேச இடைக்கால அரசுடன் நெருக்கமான உறவை தொடர இந்தியா விரும்புவதாக தெரிவித்தார்.