சென்னை: தமிழ்நாட்டில் இது வரை பெய்து வந்த தென்மேற்கு பருவமழை நேற்றுடன் விடை பெற்றது. அடுத்த மூன்று நாளில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் விடைபெற்றது. இதையடுத்து, அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வடகிழக்கு பருவமழைதான் நீரைத் தரும்.
இந்த பருவத்தில் பெய்யும் மழையால் தமிழ்நாட்டில் குடிநீர் மற்றும் பயிர்களுக்கான பாசன நீர் விடுவதில் ஏற்படும் பிரச்னைகள் தீரும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர் தேக்கங்கள், ஏரிகளில் மழை நீர் தேக்கி வைக்கப்படும். இந்த பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்கி, ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டில் பெய்யும். இந்த காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நல்ல மழை பொழிவு கிடைக்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக் கடலில் உருவாகும் புயல்களால் அதிக மழையும் கிடைக்கும். இந்நிலையில், செப்டம்பர் மாதம் இறுதியில் முடிவடைய வேண்டிய தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி வரை நீடித்தது எதிர்பாராத ஒன்று.
எனினும், தமிழ்நாட்டில் இன்று தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழையின் வெள்ளப் பெருக்கை சமாளிக்க தமிழ்நாடு அரசும் பல்வேறு வடிகால் வசதிகளை செய்து வருவதுடன், மழை நீர் தேங்கும் இடங்களில் மழை நீரை வெளியேற்ற வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை அடுத்த 3 நாட்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 354 மிமீ வரை பெய்துள்ளது. இயல்பைவிட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 74 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 18ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி 19ம் தேதி காலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல, வங்கக்கடலில் 18ம் தேதி தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்ட வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி 19ம் தேதியும் அதே இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில், நாளை காலையில் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 23ம் தேதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அப்போது அதிக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வுகளின் காரணமாக கிழக்கு மற்றும் வட கிழக்கு காற்றானது, தென்னிந்தியப் பகுதிகளில் வீசும் போது வடகிழக்கு பருவமழை ( அடுத்த 3 நாட்களில்) தொடங்கும். அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது சற்று வலுகுறைந்த காணப்படும்.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை இன்றும் நாளையும் பெய்யக்கூடும். 22ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். இந்நிலையில், தெற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.