புதுடெல்லி: போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோ குறித்து புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் நீக்கும்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மை காலமாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இதனை பயன்படுத்தி எந்தவொரு புகைப்படம் அல்லது வீடியோவை எளிதில் மற்றொருவரின் முகத்தை கொண்டு போலியாக சித்தரிக்க முடியும். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதில் அவர் அரைகுறை ஆடையுடன், லிப்டிற்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது. பின்னர் தான், அது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி ஆபாச வீடியோ என்று தெரிய வந்தது. அது இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணின் வீடியோ என்பது தெரிய வந்தது. இது குறித்து ஒன்றிய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது டிவிட்டர் பதிவில், “ஐடி விதிகளின்படி சமூக வலைதளங்களில் உண்மையான பதிவுகள் பகிரப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
தவறான பதிவுகள் குறித்து புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் அவை நீக்கப்பட வேண்டும். சமூக ஊடகத்தை பயன்படுத்துபவர்களுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், தனியுரிமைக் கொள்கை அல்லது பயனர் ஒப்பந்தத்தை உறுதி செய்தல் மற்றும் மற்றொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் எந்த உள்ளடக்கத்தையும் பதிவிட வேண்டாம் என்று பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். சமூக ஊடகங்கள் விதிகளை மதிக்காவிட்டால், ஐடி விதி 7 பயன்படுத்தப்படும்,” என்று கூறியுள்ளார்.