சென்னை: தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது கர்ப்பத்தை சுயமாக பதிவு செய்யும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தாய்மார்கள் பேறு காலத்தில் தாய்சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான பிஐசிஎம்இ (PICME) இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தாய்சேய் நல அடையாள எண் (RCH ID) வழங்கப்படும். இவ்வாறு பதிவு செய்யும் முறை அந்தந்த பகுதியில் பணிபுரியும் கிராம/நகர சுகாதார செவிலியர் மூலமாக மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது புதிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ், மகப்பேறு தாய்மார்கள் சுயமாகவே பிஐசிஎம்இ (PICME) இணையதளத்தில் சென்று தங்களது கர்ப்ப நிலையை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுவதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கணினி மூலம் இணையதளத்தில் பதிவு செய்வதற்கும், அதிலுள்ள எளிமையான வழிமுறைகளை கற்றுக்கொடுத்து பதிவு செய்வதற்கும் வரும் 27-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களும் தங்களது மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 22ம் தேதி முதல் வரும் 27ம் தேதி வரை கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது கர்ப்பத்தை சுயமாக பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.