சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.10.2023) தலைமைச் செயலகத்தில், நீர்வளத் துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் உதவி செயற் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.7 கோடி மதிப்பில் 41 ஈப்புகளை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் மேம்படுத்தி விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு துறைகளின் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை நல்ல முறையில் பராமரித்தல், பாசன கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், நிலத்தடி தடுப்புசுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கீழ் உள்ள அனைத்து உபகோட்டங்களில் பணிபுரியும் அனைத்து உதவி செயற்பொறியாளர்களுக்கும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதியதாக ஈப்பு வாகனங்களை வழங்கிடும் விதமாக, ரூ.3.7 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 41 ஈப்புகளை நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் உதவி செயற் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில் அவ்வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை உதவி செயற் பொறியாளர்களுக்கு வழங்கினார்.
இதனால் திட்ட உருவாக்க பிரிவில் பணிபுரியும் பொறியாளர்கள். நிலமேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களை பெருக்க தொலைதூர மற்றும் மலைப்பாங்கான இடங்களில் பல புதிய திட்டங்களை ஆய்வு செய்து உருவாக்க இந்த ஈப்புகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப, நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) கு.அசோகன், நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பிரிவின் தலைமைப் பொறியாளர் க.பொன்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.