திருச்சி: பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காததால், பள்ளி கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த செல்லும்போது, அவர்களை சந்திக்க தேசிய கல்வி அமைச்சக அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள்.
பள்ளிக்கல்வித்துறைக்கு ₹2,000 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பணியாற்றி வரும் வட்டார கல்வி வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும், பகுதி நேர ஆசிரியர்களுக்கும் 60 சதவீதம் ஊதியத்தை ஒன்றிய அரசும், 40 சதவீதம் ஊதியத்தை மாநில அரசும் வழங்கி வருகிறது. தற்போது முழு ஊதியத்தையும் மாநில அரசே ஏற்று வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்படப்போகிறது.
அதே போல மாணவர்களின் அறிவுசார் கலைத்திறன்களை போட்டிகள் மூலமாக வெளிக்கொண்டு வரும், கலை திருவிழாக்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பாதுகாக்கும் விதத்தில் உடனடியாக ஒன்றிய அரசு அந்த தொகையை தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.