*நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர் பேட்டி
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் மூலம் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த 149 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.9.20 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவரும், நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைவருமான வாகை சந்திரசேகர் வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கலைஞரால் தொடங்கப்பட்ட இந்த வாரியத்தின் மூலம் 22 விதமான அரசு நலத்திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போதிய நிதி ஒதுக்காததால், நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், வாரியத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதால், அனைத்து அரசு நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. நலிந்த கலைஞர்களுக்கான மாதந்திர உதவித் தொகையை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக முதல்வர் உயர்த்தி வழங்கியுள்ளார்.
நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை தளர்த்தப்பட்டுள்ளது. தற்போது சுமார் 58 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 6 லட்சம் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். அதில் குறைந்தது 2 லட்சத்திற்கும் அதிகமான கலைஞர்களை வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
அறநிலையத்துறை கோயில்களில் காலியாக உள்ள தவில், நாதஸ்வரம் போன்ற பல்வேறு கலைஞர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அமைச்சருடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் டிஆர்ஒ அன்பழகன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.