ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார். டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில் நடைபெறும் போட்டியில் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து(28வயது, 12வது ரேங்க்), இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா(24வயது, 7வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதன் முதல் செட்டை 21-18 என்ற புள்ளிக் கணக்கில் கிரிகோரியா போராடி கைப்பற்றினார். அதனால் சளைக்காத சிந்து அடுத்த 2 செட்களிலும் அதிரடி காட்டி 21-15, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால் சிந்து 2-1 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியை சந்தித்தார். மற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் முதல் 2 சுற்று ஆட்டங்களுடன் வெளியேறி விட்டனர்.