அரவக்குறிச்சி. நவ. 8: டெங்கு பரவும் காலம் என்பதால் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கை பற்றி வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். இது பற்றி வட்டார மருத்துவர் கெளசல்யா கூறியதாவது: மழைகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மேலும் காய்ச்சல் வந்தால் அலட்சியம் காட்டாமல் மருந்துகடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ அரசு சுகாதார மையங்களுக்கோ நேரில் சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் வந்தால் கடும் காய்ச்சலுடன் தலைவலி, மற்றும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் வலி ஏற்படும். டெங்கு காய்ச்சலை அலட்சியம் காட்டுவதால் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.
எனவே உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் டெங்கு குறித்து பயப்பட தேவையில்லை. டெங்கு கொசு தூய்மையான தண்ணீரில் தான் முட்டை இடும். வீட்டிலோ வீட்டு சுற்று புறத்திலோ நல்ல நீர்தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து, தண்ணீரை முடிவைக்க வேண்டும். காய்ச்சிய குடிநீரையே பருகவேண்டும். எதிர்ப்புசக்தி அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம். வீடுகளுக்கு வரும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சுற்றுப்பகுதியில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ளலாம். டெங்கு கட்டுப்படுத்த வட்டாரம் முழுவதும் தினமும் 9 இடங்களில் சுழற்சிமுறையில் நடமாடும் மருத்துவமனை மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.