சென்னை: தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் டெங்கு மற்றும் தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: டெங்கு காய்ச்சலை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 21307 தினசரி தற்காலிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு கொசுப்புழு தடுப்பு பணிகளை அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர்.
காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடைந்த குடிநீர் குழாய்களைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் கண்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்களில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. எதிர் வரும் வடகிழக்கு பருவ மழையின் போது தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், பொது மக்களும் தங்கள் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் தேங்கா வண்ணமும், குடிநீர் மாசுபடாமல் இருக்கவும் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.