சென்னை : டெங்குவை தொற்று நோயாக கர்நாடக அறிவித்த நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டு அமைக்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த இரண்டு மாதங்களாக, டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார துறை கொடுத்த தகவலின்படி, ஜனவரி 1ம் தேதியில் இருந்து நேற்று வரை மாநிலத்தில் 25,589 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 181 பேருக்கு, பாதிப்பு உறுதியாகி உள்ளது. தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பதால், டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக, தொற்று நோயாக மாநில அரசு அறிவித்துள்ளது. வீடுகள், பொது இடங்களில் சுகாதாரத்தை கடைப்பிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில், தொற்று நோய் கட்டுப்பாட்டு சட்டம் 2020ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் டெங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர், தருமபுரியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கவும் எல்லையோர மருத்துவமனைகளில் காய்ச்சலோடு வருபவர்களின் விவரங்களை அறியவும் தமிழக மருத்துவத்துறை ஆணையிட்டுள்ளது. அத்துடன் சிகிச்சைபெறும் நோயாளிகளின் விவரம், மருந்து கையிருப்பு விவரங்களை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை உத்தரவுகளின்படி, கர்நாடக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு பாதிப்பை கண்காணித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும் டெங்கு பாதிப்பை எதிர்கொள்ள சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு 40 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.