சென்னை: அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி, திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல ரவுடிகளும், பல்வேறு கட்சியினரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, அவருடைய 2 வயது மகள், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமான பகுஜன் சமாஜ் கட்சியினர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்தவர்களே அவரது கொலைக்கு உறுதுணையாக செயல்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, பா.ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.