திருக்கழுக்குன்றம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து 3 மாதம் சம்பளம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு, 3 மாத காலமாக சம்பளம் வழங்காததை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், திருப்போரூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பொன்னப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோதண்டன் கண்டன உரையாற்றினார். இதில், சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் செல்வம், மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட தலைவர் வெள்ளி கண்ணன், ஒன்றிய தலைவர் லிங்கன், ஒன்றிய செயலாளர் அருள் ராணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் விக்னேஷ் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.