முத்துப்பேட்டை, நவ. 8: முத்துப்பேட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொட்டும் மழையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு பொதுத்துறை வங்கி முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும், நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், நூறு நாள் வேலையை 200 நாள்களாக உயர்த்தி வழங்க வேண்டும், நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும், நூறுநாள் வேலையை பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் ராஜா தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் முருகையன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, நகர செயலாளர் மார்க்ஸ், ஒன்றிய துணை செயலாளர் வரதராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கொட்டும் மழையிலும் திரளாக கலந்து கொண்டனர்.