நாகர்கோவில்: கோட்டாறு பாறைக்கால் மடத்தெருவில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகாமலிருக்க பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டது. நாகர்கோவிலில் தற்போது மழை நீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீரோடைகளாக காணப்படும் அனைத்தும் முன்பு பாசனத்திற்கான கால்வாய்களாகும். விளைநிலங்கள் நகரமயமானதால், தற்போது இந்த கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன. இதில் பிரதான கால்வாய் பறக்கின்காலாகும். நாகர்கோவிலின் ஒட்டு மொத்த பகுதிகளின் கழிவுநீரும் இந்த கால்வாயில் சேர்ந்ததால், இந்த கால்வாய் நாகர்கோவிலின் கூவமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே மாறிப்போனது.
இந்த கால்வாயின் கரையோரமும் எண்ணற்ற குடியிருப்புகள் உருவாகியுள்ளன. ஏற்கனவே தாழ்வான பகுதி என்பதுடன் முன்பு வெள்ள நீர் வடிந்த நிலம் என்பதால், பெரு மழை வெள்ளத்தின் போது, பாறைக்கால் மடத்தெரு மற்றும் அதன் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழ்வது வாடிக்கை. இந்தநிலையில், பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், இந்த கால்வாயில் பிளாஸ்டிக் கவர்களுடன், வீடுகளில் தூக்கி வீசப்படும் பழைய துணிகள், மெத்தைகள், பாட்டில்கள் என ஒட்டுமொத்த கழிவுகளும் பறக்கின் காலில் கலந்து வருகின்றன. இந்த கழிவுகள் பாறைக்கால் மடத்தெருவில் உள்ள தரைமட்ட பாலப்பகுதியில் தேங்கி நிற்பதால், கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதன் காரணமாக கழிவுநீரும் செல்ல முடியாமல் துர்நாற்றமும், கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்து அந்த பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மிதமான மழைக்கே மழை வெள்ளம் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வந்தது. இதனை கடந்த சில மாதங்கள் முன்பு மழை வெள்ளத்தின் ேபாது ஆய்வு செய்த அப்போதைய மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், தரைமட்ட பாலத்திற்கு பதிலாக 3.5 அடி உயரத்தில் புதிய பாலம் அல்லது மெட்டல் பாலம் அமைத்து விட்டு பழைய பாலத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஏற்கனவே இப்பகுதி தெருக்களில் அலங்கார தரைகற்கள் பதிக்கப்பட்ட பணியில் மீதமான தொகை மூலம் மெட்டல் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனையடுத்து, கழிவுகளை எளிதில் தூர்வார வசதியாகவும், மழை வெள்ளம் ஊருக்குள் புகாமலிருக்க பழைய தரைமட்ட பாலத்தை இன்று (19ம் தேதி) இடித்து அகற்றி வருகின்றனர்.