புதுடெல்லி: பழைய நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நேற்று இரு அவைகளின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜனநாயக மாண்புகளையும், லட்சியங்களையும் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று தெரிவித்தார். அவரது பேசுகையில் ‘அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு முயற்சி என்ற அடிப்படையின் மீதுதான் இந்தியாவின் வளர்ச்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் அரசியல் கட்சிகள் என்பதை மறந்து, தேசம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றின் பாதுகாப்புக்காக ஒன்றாக செயல்படுவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நமது அரசியலமைப்பை கட்டமைத்த ராஜேந்திர பிரசாத், ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், அம்பேத்கர், மவலாங்கர், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகிய தலைவர்களை நினைவு கூர்கிறேன். நேற்று முன் தினம் ஜவகர்லால் நேருவின் வரலாற்று சிறப்பு மிக்க உரைகளை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.