வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கல்வியாளரும் மினிசோட்டா மாகாண ஆளுநருமான டிம் வால்ஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் மாநாடு சிகாகோ நகரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து துணை அதிபராக வினிசோட்டா மாகாண ஆளுநர் டிம் வால்சை ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய உலக புகழ்பெற்ற அமெரிக்க முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஓப்ரா வின்ஃபிரே அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு மேடையில் பாடல் பாடி புகழாரம் சூட்டினார். அமெரிக்காவில் கட்சி சாராத வாக்காளர்கள் மற்றும் இதுவரை முடிவு செய்யாத வாக்காளர்கள் அனைவரும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஓப்ரா வின்ஃபிரே கேட்டுக்கொண்டார்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க முன்னாள் அதிபரான பில் கிளிண்டன் தாம் அதிபராக இருந்த போது அடிக்கடி சென்றிருந்த மெக்டொனால்டு உணவகத்திற்கு தம்மை விட அதிகமுறை சென்று கமலா ஹாரிஸ் சாதனை படைப்பார் என்று கமலா ஹாரிஸ் நகைச்சுவையாக தெரிவித்தார். 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் மெக்டொனால்டு உணவகங்களுக்கு அடிக்கடி சென்றுவந்த புகைப்படங்கள் ஏராளமாக இணையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.