Tuesday, July 15, 2025
Home செய்திகள்Showinpage ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து எமர்ஜென்சி எதிர்ப்பு இயக்கம் நல்ல படிப்பினை கொடுத்தது: நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி

ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து எமர்ஜென்சி எதிர்ப்பு இயக்கம் நல்ல படிப்பினை கொடுத்தது: நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி

by Ranjith

புதுடெல்லி: எமர்ஜென்சி காலகட்டம், ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து தனக்கு நல்ல படிப்பினை அனுபவத்தை தந்ததாக பிரதமர் மோடி கூறி உள்ளார். கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. அதன் 50வது நினைவு நாளான நேற்றைய தினத்தை ஒன்றிய பாஜ அரசு அரசியலமைப்பு படுகொலை நாளாக அறிவித்தது. இது அரசியல் ரீதியாக எமர்ஜென்சி குறித்த பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எமர்ஜென்சி காலகட்டத்தில் பிரதமர் மோடியின் பல்வேறு அனுபவங்களை தொகுத்து ப்ளூகிராப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை ‘எமர்ஜென்சி டைரீஸ்-ஒரு தலைவரை உருவாக்கிய ஆண்டுகள்’ என்ற புத்தகத்தை தயாரித்துள்ளது. புத்தகத்தின் முன்னுரையை எமர்ஜென்சி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய தலைவரான எச்.டி.தேவகவுடா எழுதியுள்ளார். இப்புத்தகத்தை ஒன்றிய உள்துறை அமித்ஷா டெல்லியில் நேற்று வெளியிட்டார். இப்புத்தகம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்த புத்தகம் எமர்ஜென்சி காலத்தில் எனது பயணத்தை விவரிக்கிறது. இது பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது. அப்போது தான் இளம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தேன். ஊடகங்கள் மீதான தணிக்கை தவிர, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டன. எமர்ஜென்சி சமயத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது போல் இருந்தது.

எமர்ஜென்சி எதிர்ப்பு இயக்கம் எனக்கு படிப்பினை அனுபவமாக இருந்தது. அது, நமது ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. அதே சமயம், பல்வேறு மக்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. எமர்ஜென்சியின் இருண்ட நாட்களை நினைவில் வைத்திருப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அனுபவங்களை பகிர வேண்டும். இது, 1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலம் குறித்து இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

எமர்ஜென்சி இந்தியாவின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று.இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது எக்ஸ் பதிவில், ‘‘ஜூன் 25, 1975 அவசரநிலை அமல்படுத்தப்பட்ட தேதியை நாம் அனைவரும் நினைவில் கொள்கிறோம். இது சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று அழைக்கப்படுகிறது. எமர்ஜென்சியின் போது கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது. அன்றைய அரசின் சர்வாதிகாரப் போக்கின் அடையாளமாக இருந்தது’’ என்றார்.

* பாஜ அரசின் தோல்வி மறைக்க நடத்தும் நாடகம்
எமர்ஜென்சியின் 50ம் ஆண்டு நிகழ்வில், பிரதமர் மோடியின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘சுதந்திர போராட்டத்தில், அரசியலமைப்பை உருவாக்குவதில் எந்தப் பங்கையும் வகிக்காதவர்கள், அம்பேத்கரின் அரசியலமைப்பை நிராகரித்தவர்கள் அவசரநிலை விதிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் பற்றிப் பேசுகிறார்கள். மக்கள் மறந்து விட்ட ஒன்றை இப்போது எழுப்புகிறார்கள்.

அரசியலமைப்பை நிராகரித்த பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் இப்போது திடீரென ஞானம் பெற்றிருப்பது ஏன்? அவர்கள் ஆட்சி செய்வதில் தோல்வி அடைந்துள்ளனர். தங்களின் தோல்வியை மறைக்க இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள். உண்மையில், பிரதமர் மோடியாலும், அவரது ஆட்சியாலும் இன்றைய அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது. அதை காப்பாற்றுவது பற்றி மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

* 11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்த அறிக்கையில், ‘அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறார்கள். வெறுப்பு மற்றும் மதவெறியை பாஜ தலைவர்கள் வேண்டுமென்றே பரப்புகிறார்கள். போராடும் விவசாயிகள் காலிஸ்தானிகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள். சாதி கணக்கெடுப்பை ஆதரிப்பவர்கள் நகர்ப்புற நக்சல்கள் என்று நிராகரிக்கப்படுகிறார்கள். ஆனால், மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் மகிமைப்படுத்தப்படுகிறார்கள்.

சிறுபான்மையினர் தங்கள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பயந்து வாழ்கிறார்கள். தலித்துகள், பிற ஒதுக்கப்பட்டவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். வெறுப்பு பேச்சுக்களை பேசும் அமைச்சர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. எனவே கடந்த 11 ஆண்டுகள், முப்பது நாட்கள், இந்திய ஜனநாயகம் 5 மடங்கு ஆபத்தான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதை அறிவிக்கப்படாத அவசரநிலை@11 என விவரிக்கலாம்’ என கூறி உள்ளார்.

* அரசியலமைப்பு விதிகளின்படியே அவசரநிலை அமல்
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘உள் மற்றும் வெளிப்புற சக்திகளால் அராஜகத்தைப் பரப்ப முயற்சிகள் நடக்கும்போது அவசரநிலையை அறிவிப்பதற்கான விதிகள் அரசியலமைப்பில் உள்ளன. அதை பாஜ படிக்க வேண்டும். இந்த விதியின்படிதான் இந்திராகாந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். அதை சட்டப்பூர்வமாகச் செய்தார். சிறப்புக் கூட்டத்தை கூட்டி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றார். சரியான நேரத்தில் அதை வாபஸ் பெற்றார். ஆனால் இப்போது இந்தியா அறிவிக்கப்படாத அவசரநிலையை எதிர்கொள்கிறது’’ என்றார்.

* அரசியலமைப்பை ஒழிக்க பாஜ முயற்சி
கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பதிவில், ‘‘அவசரநிலை பிரகடனம் இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயம். ஆனால் அது திடீரென அல்லது எதிர்பாராத நிகழ்வு அல்ல. பல ஆண்டுகளாக சர்வாதிகார போக்குகள், பொது உரிமைகள் அரிக்கப்பட்டதன் கொடூரமான உச்சகட்டம். ஆனால் தற்போது நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை கடந்து வருகிறது. இந்திரா காந்தி அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்தார் என்றால், இன்று சங்க பரிவார் அரசு அதை ஒழிக்க முயற்சிக்கிறது’’ என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi