*விழுப்புரத்தில் ஆணைய தலைவர் பேட்டி
விழுப்புரம் : தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினர் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார் என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் அதன் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச தலைமையில் நடந்தது. ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் கூறியதாவது: மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முக்கிய நோக்கமாக சிறுபான்மையினர் மக்களின் நலனுக்காக அரசு செயல்படுத்திய திட்டங்களால் சிறுபான்மையினர் மக்கள் அடைந்த பலன்கள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இதுமட்டுமல்லாமல், சிறுபான்மையினர் பெண்கள் பெற்ற நலத்திட்ட உதவிகளின் மூலமாக எவ்வகையில் வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஓரிரு மாதங்களுக்குள் முதலமைச்சரிடம் வழங்கப்படும். இந்த ஆணையம் தற்போது வரை 21 மாவட்டங்களில் சிறுபான்மையினர் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
நவம்பர் மாதம் சென்னையில் 38 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டங்களை முடித்து வருகிற பரிந்துரைகளை முதலமைச்சரிடம் வழங்குவதோடு, தேவைப்பட்டால் சட்டத்தின்படி சட்டமன்றத்திலும் பரிந்துரைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினர் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார். தமிழ்மொழியை தாய்மொழியாக இல்லாமல் வேறு மொழி பேசுகிற அனைவரும் சிறுபான்மையினர்களாவர். அவர்களுக்கும் நலத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்புகள் வழங்கப்படும் என்பது முதலில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பதிவுபெற்ற வகுப்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான திட்டமும் அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கமும் செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தின் மூலமாக 542 நபர்களுக்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், பாடகர்கள், கல்லறைப்பணியாளர்களுக்கு ஊதியத் தொகை வழங்கப்பட்டுள்ளதோடு, 241 நபர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினர் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதால், தங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் தெரிவித்திடலாம்.
தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண்பதற்கு வழிவகை ஏற்படுத்தி கொடுக்கப்படும். இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்ந்து 310 பயானாளிகளுக்கு ரூ.29,97,046 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் எம்.எம்.அப்துல்குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், எஸ்பி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், ஊரகவளர்ச்சிமுகமை கூடுதல் ஆட்சியர் பத்மஜா, திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்ஷீநிகம், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ரவிக்குமார் எம்பி, உறுப்பினர்கள் நாகூர்.ஏ.எச்.நஜ்முதீன், பிரவீன்குமார்டாட்டியா, பொன்.ராஜேந்திர பிரசாத்ஜெயின், எம்.ரமீட்கபூர், முகம்மதுரபி, வசந்த், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.