சென்னை: ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர் ): கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான முறையில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குடும்பத்தோடு, குழந்தைகளோடு கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களின் உரிமைக்காக போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து அதனை நிறைவேற்ற வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): ஆசிரியர் போராட்டம் தொடரும் நிலையில் மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, காலதாமதமின்றி போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும், ஆசிரியர்கள் மீது கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. மேலும் பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தினர்.