ஏலகிரி: ஏலகிரி மலையில் அரசுப்பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் உள்ள ராட்சத மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு சாலை ஓரங்களிலும் மலைப்பகுதிகளிலும் பழமை வாய்ந்த மரங்கள் காணப்படுகிறது. இந்நிலையில் பழத்தோட்டம் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியின் அருகில் மிகவும் பழமை வாய்ந்த கல்துரிஞ்சி மரம் ஆபத்தான முறையில் சாலையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் அவ்வழியாக பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்கின்றனர். எனவே மரம் வேரோடு சாய்ந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே இதை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.