திருவள்ளூர்: கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கடம்பத்தூர் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகே கடம்பத்தூர் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். கடம்பத்தூர் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் சேகர், பொருளாளர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ரயில் பயணிகள் சங்கத்தினர் கலந்து கொண்டு, கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளங்களில் யார்டு போன்று சரக்கு ரயில்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். திருவள்ளூரில் காச்சி கவுடா, பிருந்தாவன், கோவை, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களை ஒரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கடம்பத்தூரில் இருந்து சென்னைக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் கருடாத்திரி, ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களை ஒரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் 12 பெட்டிகளாக இயக்க வேண்டும். கடம்பத்தூரில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை துரிதப்படுத்தி ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட கடம்பத்தூர் – சென்னை ரயிலை விரைவில் இயக்க வேண்டும். கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரிட்டன் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.