திருச்சி: டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெயில் அளவுக்கதிகமாக சுட்டெரித்தது. தற்போது ஆடி மாதம் பிறந்து காற்று வீச தொடங்கினாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நேற்று இரவு பல இடங்களில் மழை பொழிந்தது. திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில், பெரம்பலூர் மாவட்டத்தில் 9 மணிக்கு துவங்கி இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.நாகை மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் பலத்த மழை பெய்தது.
மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மிதமாகவும், தஞ்சையில் அதிகாலை 1.30 மணி முதல் 3 மணி வரையும் பரவலாக மழை பொழிந்தது. திருவாரூரில் அதிகாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் திருவாரூர் பிடாரி அம்மன் கோயில் தெருவில் ஒரு வீட்டில் இருந்த ஆலமரக்கிளை முறிந்து வீட்டின் மதில் சுவர், அந்த வழியே சென்ற மின்கம்பி மீது விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து பிடாரிஅம்மன் கோயில் தெரு-புதுத்ெதரு இடையே உள்ள ஒரு மின் கம்பம் சாய்ந்தது.
இந்த திடீர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10,000 ஏக்கர் குறுவை சாய்ந்தது: மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாவில் 90,000 ஏக்கர் பரப்பளவில் பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்றிரவு பெய்த மழையால், மங்கைநல்லூர், மணல்மேடு, திருஇந்தளூர், சேமங்கலம் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் வயலில் மழைநீர் தேங்கி குறுவை பயிர்கள் சாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.