Friday, February 23, 2024
Home » டெல்டாவில் இலைக்கட்சியின் வாக்குகளை உடைக்க நடக்கும் திரைமறைவு வேலைபற்றி சொல்கிறார்: wiki யானந்தா

டெல்டாவில் இலைக்கட்சியின் வாக்குகளை உடைக்க நடக்கும் திரைமறைவு வேலைபற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘பாரம்பரியமிக்க சித்த மருத்துவ கல்லூரி கருத்தரங்க அழைப்பிதழில் ஏதோ விவகாரமாமே’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாரம்பரியம் மிக்கது. அகஸ்தியர் தவம் செய்த பொதிகை மலை அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையைக் கொண்ட நெல்லையில் இக்கல்லூரி 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சித்த மருத்துவக் கல்லூரியில், தேசிய அளவிலான கருத்தரங்கம் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைவரும் சித்த மருத்துவக் கல்லூரி இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்கள். சித்த மருத்துவத்தை பொறுத்தவரை தமிழ் மருத்துவம் என்பதால் தமிழில் தான் பாடம் முழுவதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தேர்வும் தமிழிலேயே எழுதுகின்றனர். அப்படி ஒரு தமிழ் மருத்துவத்தை கற்றுத்தரும் பாரம்பரியம் மிக்க கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்கு அழைப்பிதழ் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாது, அந்த கல்லூரி துணை முதல்வரின் வரவேற்புரையும் ஆங்கிலத்தில் இடம்பெற்றது. இந்த கருத்தரங்கை முழுக்க முழுக்க தொகுத்து வழங்கியதும் ஆங்கிலத்தில்தான். ஆனாலும், ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றியவர் ஆங்கில மருத்துவக் கல்லூரியின் டீன் (பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி) என்ற போதிலும் தமிழில் உரையாற்றியதுடன், ஆங்கில மருத்துவ முறை தோன்றுவதற்கு முன்பே தோன்றியது தமிழ் மருத்துவம் என பாராட்டவும் தவறவில்லை. ஆங்கிலம் ஒரு மொழி, அந்த அறிவும் அவசியம்தான் என்றாலும், பாரம்பரியம் மிக்க தமிழ் மருத்துவக் கல்லூரியில் கருத்தரங்கை முழுவதும் தமிழில் நடத்தியிருக்கலாமே என்பதுதான் கலந்துகொண்ட மாணவர்களின் ஆதங்கம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெல்டாவில் இலை கட்சியின் வாக்குகளை உடைக்க திரைமறைவான வேலையில் தேனிக்காரர், குக்கர் கட்சி ஆதரவாளர்கள் இறங்கியிருக்கிறாங்களாமே’’ அத சொல்லுங்க என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் இடையே ஏற்பட்ட பனிப்போரால், தேனிக்காரர் அவரது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். இவரை பின் தொடர்ந்து நெற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ அவரது ஆதரவாளர்களுடன் தேனிக்காரர் அணியில் ஐக்கியமானார். தொடர்ந்து நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வைத்தியானவர் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் டெல்டா மாவட்டத்தில் இலை கட்சி வாக்குகளை எவ்வாறு உடைக்க வேண்டும் என்பது குறித்து வைத்தியானவருக்கு, தேனிக்காரர் முக்கிய அசைமெண்ட் கொடுத்துள்ளாராம்.. இதற்கான வேலை திரைமறைவில் ரகசியமாக நடந்து வருகிறதாம்.. நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் மாவட்டங்களில் குக்கர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் சமீபத்தில் சேலத்துக்காரர் அணியில் ஐக்கியமானார்கள். இதில் அவர்களுக்கு ஆதரவாக உள்ள நபர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த குக்கர் கட்சி மற்றும் தேனிக்காரர் டீம் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதன் மூலம் இலை கட்சியின் வாக்குகளை உடைக்க முடியும் என தேனிக்காரர், குக்கர் டீம் நம்புகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குறைஞ்ச விலைக்கு பட்டாசு, பேனர் வாங்கித்தர்றேன்னு கட்சிக்குள்ளவே வசூல் வேட்டை’’ நடந்த கதை தெரியுமா?’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல மலர் கட்சியில நார்த், சவுத் என்று ரெண்டு மாவட்டங்கள் உள்ளன. இதுல நார்த் மாவட்டத்திற்கு மாநில தலைவர் கடந்த இரண்டு நாளைக்கு முன்னாடி வந்தாரு.. அதுக்காக வந்தாவாசி நகரத்துல செவன் ஹில்ஸ் பெயரை கொண்டவரு, எல்லா நிர்வாகிங்களும், பணத்தை என்கிட்ட கொடுங்க, நான் பேனர் போட்டு வைக்கிறேன். பட்டாசு வாங்கித்தருகிறேன்னு நிர்வாகிகள் கிட்ட பட்டியல் போட்டு கேட்டிருக்குறாரு. அதுக்கு சக நிர்வாகிங்க, எங்களுக்கு பட்டாசு வாங்க தெரியாதா, பேனர் போட தெரியாதான்னு கேட்டிருக்குறாங்க. அதுக்கு, நீங்க எங்க, யார்கிட்ட, எவ்ளோ வாங்குனீங்கன்னு தெரியும். எல்லா பணத்தையும் கொடுங்க நான் மொத்தமாக குறைஞ்ச ரேட்டுக்கு எல்லாத்தையும் வாங்கி தர்றேன்னு சொல்லி கறாராக வாங்கிக்கிட்டாராம்.. தலைவரும் வந்தாராம், பட்டாசு வரும், பேனர் வரும், அதில் பெயர் வரும் என்று எதிர்பார்த்தவங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியதாம். இதனால அந்த ஏரியா மலர் கட்சி நிர்வாகிங்க, மாவட்டத்தோட தலைமை நிர்வாகி மேல செம கடுப்புல இருக்காங்களாம். இந்த மோதல் போக்கு, வர்ற எலக்‌ஷன்ல வெடிக்கும்னு கட்சிக்குள்ளவே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போக்குவரத்து கமிஷனர் பேர சொல்லி வசூல் வேட்டை நடக்குதாமே’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘கோவை ஆர்டிஓ அலுவலங்களில் நடக்கும் பணியை பார்க்கவும், மண்டல அளவிலான கூட்டம் நடத்தவும் போக்குவரத்து கமிஷனர் கோவைக்கு வந்தாராம்.. இவரு வர போகும் தகவல் முன்கூட்டியே தெரியவந்த அதிகாரிகள், பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மத்திய ஆர்டிஓ அலுவலகத்தை சுத்தம் செய்ய முடிவு பண்ணியிருக்காங்க.. கமிஷனர் வரும் போது ஆபீஸ் நீட்டா இருக்க வேண்டும் என்பதாலும், கமிஷனர் வருவதாகவும் கூறி டீலர்களிடம் வசூல் வேட்டையில் ஆர்டிஓ இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் ஈடுபட்டு இருக்காங்களாம்.. சிவனேனு இருந்த இன்ஸ்பெக்டர்கள தூண்டி வசூல் வேட்டையில் இறங்க வச்சது மண்டல உயர் அதிகாரினு சொல்லறாங்க.. அதிகாரியே சொல்லிட்டாருனு இன்ஸ்பெக்டர்கள் வசூலில் சில லட்சங்களை வாங்கி கொஞ்சம் ஆபீசையும் ரெடி செஞ்சு வச்சு இருக்காங்க.. மத்திய ஆபீசுல அலுவலக பணியாளர்களும் குறைவு. இதனால வெளியாட்கள வச்சு தான் பணிகள் எல்லாம் நடக்குது. கமிஷனர் ஆய்வு என்பதால் வௌியாட்களை அனுப்பி விட்டாங்களாம்.. ஆய்வு முடிஞ்சு கமிஷனர் போன சில மணி நேரத்தில் திரும்பவும் அவங்க பணிக்கு வந்துட்டாங்களாம்.. கமிஷனர் பேர சொல்லிய வசூலில் ஈடுபட்ட அதிகாரிகளை பார்த்த சக ஊழியர்கள் அசந்து போய் இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi