தஞ்சை: பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கான சந்தை பருவத்தில் 14 காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கான வட்டி மானியத்தை தொடரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, நெல் பொது மற்றும் கிரேடு ஏ ரகத்திற்கு ரூ.69 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் ரூ.2,369 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச ஆதார விலை மிகவும் குறைவானது என டெல்டா விவசாய சங்க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்: சி.ஏ.சி.பி பரிந்துரைத்துள்ள விலையில் நியாயம் இல்லை. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் ஒரு ஏக்கர் நெல் உற்பத்திக்கு செய்கிற செலவினங்களை அடிப்படையாக பார்த்தால் தற்போது சிஏசிபி பரிந்துரையின்படி ஒன்றிய அரசு அறிவித்திருக்கின்ற நெல்லுக்கான கூடுதல் விலை மிகக் குறைவு என்பது நன்கு புலனாகும். எனவே ஒன்றிய அரசின் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஏற்புடையது அல்ல. விலை அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு: நெல்லுக்கு இருமடங்கு லாபகரமான விலை தருவதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த ஒன்றிய அரசு வெறும் ரூ.69 அதிகரித்துள்ளது. உரம், வேலையாட்கள் கூலி உள்பட அனைத்தும் உயர்ந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. கார்பரேட் நிறுவனங்களுக்கு வங்கியில் ரூ.23,000 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏழை விவசாயிகள் நகை கடன் வாங்க கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. கடன் கெடுபிடிகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை ஒன்றிய அரசால் தான் கொடுக்க முடியும். விவசாயிகளை ஒன்றிய அரசு ஏமாற்றுகிறது. இதை கண்டிக்கிறோம். குறைந்த பட்சம் நெல் குவிண்டாலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சீர்காழி ராஜேஷ்: நடப்பாண்டில் குவிண்டாலுக்கு வெறும் ரூ.69, அதாவது 3% மட்டும் உயர்த்துவது போதுமானது அல்ல. விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: நெல் உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை சட்டம் கொண்டு வர கோரி விவசாயிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று பல நூறு விவசாயிகள் பலியாயினர். பிப்ரவரி முதல் தொடர்ந்து ஒன்றிய அரசுடன் 4 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் எதுவும் இதுவரை கொடுக்கப்படவில்லை. தற்போது நெல் குவிண்டாலுக்கு ரூ.69 குறைந்த பட்ச ஆதார விலை அறிவித்துள்ளது ‘யானை பசிக்கு சோளப்பொரி’ என்பது போல் உள்ளது. ஒன்றிய அரசு விவசாயிகளை தொடர்ந்து பழிவாங்கும் செயலில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது.