பனீர்தோ பியாஸ்
தேவையானவை
பனீர் – 200 கிராம்,
கறுப்பு சீரகம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்,
சதுரமாக நறுக்கிய வெங்காயம் – அரை கப் ,
தக்காளி – 2 (அரைக்கவும்),
பச்சை குடைமிளகாய் – ஒன்று,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
முந்திரி – 50 கிராம்,
கொத்தமல்லி – சிறிதளவு, கிரீம் – அரை டீஸ்பூன், உப்பு –
தேவையான அளவு.
செய்முறை
பனீரை சதுரம் சதுரமாக வெட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, குடைமிளகாய் இரண்டையும் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம் சேர்த்து, பொரிந்தபின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த தக்காளியை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல், எண்ணெய் பிரிந்துவரும் வரை வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, சதுரமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கொதிவந்த பின் பொரித்த பனீர், அரைத்த முந்திரி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் கிளறவும். கலவை நன்றாக கலந்து வரும்போது கிரீம் சேர்த்துக் கிளறினால் பனீர் தோ பியாஸ் ரெடி.
வெற்றிலை ரசம்
தேவையானவை
வெற்றிலை – 10 ,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 8 பல்,
மிளகு – அரை டீஸ்பூன்,
புளி – 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4,
கறிவேப்பிலை – தேவையான அளவு,
எண்ணெய் – 50 மில்லி,
உப்பு -தேவையான அளவு.
செய்முறை
முதலில் எடுத்து வைத்திருக்கிற வெற்றிலைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் பூண்டு, மிளகு, சிறிது சீரகம் மூன்றையும் இடித்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும். இதில் இடித்து வைத்திருக்கும் மசாலா, அரைத்த வெற்றிலையைச் சேர்த்து, புளிக்கரைசல் ஊற்றி உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். பின்னர் ஒரு வெற்றிலையை, நீளமான துண்டுகளாக நறுக்கி மேலே தூவினால் வெற்றிலை ரசம் தயார்.
பனீர் மகாராணி
தேவையானவை
கறுப்பு உளுத்தம்பருப்பு,
கடலைப் பருப்பு,
ராஜ்மா ஆகியவை தலா கால் கப்,
பனீர் – 150 கிராம்,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 3,
நறுக்கிய இஞ்சி – சிறிதளவு,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
கடுகு – கால் ஸ்பூன்,
கிரீம் – 100 மில்லி,
வெண்ணெய் – 100 கிராம்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ராஜ்மா மூன்றையும் சுத்தம் செய்து இரவு முழுவதும் நன்றாக ஊறவிடவும். அவை நன்கு ஊறிய பின், மசியும் பதத்தில் வேக வைக்கவும். வாணலியில் வெண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விடவும். பொரிந்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கிய பின், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும், மசித்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். கலவை கொதித்து வரும்போது நறுக்கிய பனீர் மற்றும் கிரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்த பின் கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.
கோஸ் தேங்காய் கிரேவி
தேவையானவை
முட்டைக்கோஸ் – கால் கிலோ,
கடலைப்பருப்பு – 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – 3,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
கீறிய பச்சை மிளகாய் – 2,
தேங்காய் – அரை மூடி (விழுதாக அரைத்துக் கொள்ளவும்),
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
ஒரு வாணலியில் கடலைப்பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்துக் கொள்ளவும். முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பை தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் நறுக்கிய கோஸ், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, பொடித்த கடலைப்பருப்பு மிளகாய் கலவை, உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். கலவை நன்றாக கொதித்து கெட்டியான பின் இறக்கிப் பரிமாறவும்.