புதுடெல்லி: டெல்லி பல்கலை மாணவர் சங்க தேர்தலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் மிகவும் முக்கியமாக எதிர்பார்க்கப்படும். இந்த தேர்தலில் கடைசியாக 2017ல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ.) வெற்றி பெற்றது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஏபிவிபி மாணவர் அமைப்பினரும் வெற்றி பெற்று வந்தனர். தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்று தலைவர் பதவியை பிடித்துள்ளது. இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ரவுனக் காத்ரி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 20,207 வாக்குகள் பெற்றார்.
ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஏபிவிபி வேட்பாளர் ரிஷப் சவுத்ரி 18,864 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் தலைவர் பதவியை ரவுனக் காத்திரி கைப்பற்றினார். இணைச் செயலாளர் பதவிக்கான போட்டியில், மாணவர் காங்கிரசின் லோகேஷ் சவுத்ரி 21,975 வாக்குகள் பெற்று ஏபிவிபியின் அமன் கபாசியாவை 6,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். துணைத் தலைவர் பதவிக்கு ஏபிவிபி வேட்பாளர் பானு பிரதாப் சிங் 24,166 வாக்குகள் பெற்று என்எஸ்யுஐவின் யாஷ் நந்தலை 8,762 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். செயலாளர் பதவிக்கு ஏபிவிபியின் மித்ரவிந்தா கரண்வால் 16,703 வாக்குகள் பெற்று என்எஸ்யுஐவின் வேட்பாளர் நம்ரதா ஜெப் மீனாவை 1,447 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.